மத்திய அரசின் தனியார்மயமாக்கல், அரசு சொத்துக்களை விற்றல், எரிபொருட்களின் விலை உயர்வு, எஸ்மா சட்டம், பிஎப் வட்டி குறைப்பு உள்ளிட்ட கொள்கைகளை கண்டித்தும், நூறு நாள் வேலைத் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு, ஏழைகளுக்கு மாதம் 7,500 உதவித்தொகை பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்டவற்றை கோரியும் மத்திய அரசை கண்டித்து மார்ச் 28, 29 ஆகிய இரண்டு நாட்களில் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 20 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பதால் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இந்த நிலையில் வேலை நிறுத்தத்தின் போது பேருந்துகள் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். வேலை நிறுத்தத்துக்கு ஏஐடியுசி, சிஐடியு தேசிய தொழிற்சங்கங்கள் மட்டுமல்லாமல் திமுகவின் தொழிற்சங்க அமைப்பான தொமுசவும் ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்ததால் பேருந்துகள் இயங்குவது சந்தேகமே என்று கூறப்பட்ட நிலையில் அமைச்சர் இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார்.