தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பாக திருத்திய வழிகாட்டு முறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. அதன்படி திறனுள்ள ஆசிரியர்களை மட்டுமே தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்றும் வகுப்புகளில் பாடம் நடத்தி திறனை அறிந்து நியமனம் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.அதுமட்டுமல்லாமல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை நியமிக்கலாம் எனவும்,தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்களின் பணி திருப்தி இல்லை என்றால் உடனே பணியில் இருந்து நீக்கப்படுவார்கள் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதையடுத்து தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க ஜூலை ஆறாம் தேதி கடைசி நாள் எனவும் நாளை மாலை வரை விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் தற்போது வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது தற்காலிக ஆசிரியர் நியமனத்தில் எவ்வித சர்ச்சையும் கிடையாது என்றும் முதல்வரின் அறிவுரைப்படி தற்காலிக ஆசிரியர் நியமனம் நடந்து கொண்டிருக்கிறது.
தமிழக பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்களை நியமிப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றது. மேலும் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளுக்கு விரைவில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். இது தொடர்பான வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும்.அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஜாதி மத கூட்டங்களுக்கு ஒருபோதும் அனுமதி கிடையாது என்று அவர் தெரிவித்துள்ளார்.