தமிழகத்தில் பள்ளி கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். தமிழக பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளின் ஆசிரியர்கள் இடமாறுதலுக்கு, நடப்பு கல்வி ஆண்டுக்கான கவுன்சிலிங் தேதி பற்றிய கால அட்டவணை, கடந்தவாரம் அறிவிக்கப்பட்டது.
இதில் கலந்துகொண்டு இடமாறுதல் கேட்கும் ஆசிரியர்கள் தங்கள் விண்ணப்பங்களை கடந்த 31-ஆம் தேதி முதல் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த பதிவுக்கு இன்று கடைசி நாள். ஆசிரியர்களின் விண்ணப்ப பதிவுக்கான ஆன்லைன் தளம் நேற்றிலிருந்து தான் செயல்பட துவங்கியது.
அதனால் விண்ணப்பம் பதிவு செய்ய, ஒரே நேரத்தில் ஏராளமான ஆசிரியர்கள் முயற்சி செய்வதால், இணையதள சர்வர் சுமை அதிகரித்து பதிவு பணிகள் தாமதமாகி உள்ளதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர். பல மாவட்டங்களில் ஆசிரியர்கள் தங்களின் விண்ணப்பங்களை முதன்மை கல்வி அலுவலகங்களில் சமர்ப்பித்துள்ளனர். அந்த படிவங்களை பதிவேற்றம் செய்வதும் தாமதமாகியுள்ளது. இருந்தபோதிலும் திட்டமிட்டபடி ஆசிரியர் கவுன்சிலிங் நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.