ஆசிரியர் காலிப்பணியிடங்கள் குறித்து பள்ளிக்கல்வித்துறை ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் 2,381 அங்கன்வாடி மையங்களை கடந்த 2019-20 ஆம் கல்வியாண்டில் இணைத்தனர். அதன்பிறகு எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வந்தது. இங்கு சேரும் குழந்தைகளுக்கு பாடம் நடத்துவதற்காக ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டனர். ஆனால் இந்த கல்வியாண்டில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் நடைபெறாது என கல்வித்துறை அறிவித்துள்ளது. அதாவது அங்கன்வாடி மையங்கள் வழக்கம் போல் செயல்படும் எனவும், அங்கன்வாடி மையங்களின் முழு பொறுப்பும் சமூக நலத்துறையிடம் ஒப்படைக்கப்படும் எனவும் கல்வித் துறை கூறியுள்ளது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை தொடக்கக் கல்வி இயக்குனர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பில் கடந்த 2013-ம் ஆண்டுக்குப் பிறகு புதிதாக ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால் ஓய்வுபெறும் ஆசிரியர்களின் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கிறது. இதனால் அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இடைநிலை வகுப்புகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அதன்பிறகு அரசு பள்ளிகளில் 4,853 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கிறது. இதைத்தொடர்ந்து கூடுதலாக 4,519 ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். இதனால் எல்.கே.ஜி யு.கே.ஜி வகுப்புகளை எடுத்து வந்த ஆசிரியர்கள் மீண்டும் தொடக்கப்பள்ளிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும் அங்கன்வாடி மையங்களில் ஏற்கனவே இருந்தது போல ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலமாக மாணவர்களுக்கு கற்றல் பயிற்சி வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.