ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் கல்வியறிவு மற்றும் சமூக பொருளாதார நிலையை உயர்த்தி அவர்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் அடிப்படையில் அவர்களுக்கான நலப்பள்ளிகள், விடுதிகளை கட்டுதல், வீட்டுமனை பட்டா வழங்குதல், குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், மானியத்துடன் கூடிய கடனுதவி, இளைஞர்களுக்கு சுயதொழில் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கிட பல திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளித்தல், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் செயலாக்கத்தை கண்காணித்திட முதலமைச்சர் தலைமையில் மாநில அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது போன்ற திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில் ஆதிதிராவிடர் மற்றும்பழங்குடியினர் நலத்துறை சார்பாக நாகையில் ரூபாய் 1 கோடியே 32 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் பள்ளி மாணவர் விடுதி, செங்கல்பட்டு மாவட்டம் பவுஞ்சூரில் ரூபாய் 1 கோடியே 11 லட்சத்திலும், நாகை திருமருகலில் ரூபாய் 1 கோடியே 32 லட்சத்திலும், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் ரூபாய் 1 கோடியே 50 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள 3 ஆதிதிராவிடர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் விடுதிகள், செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கத்தில் ரூபாய் 2 கோடியே 80 லட்சத்திலும், நாகல்கேணியில் ரூபாய் 2 கோடியே 44 லட்சத்திலும், நாமக்கல் மாவட்டம் களங்காணியில் ரூபாய் 2 கோடியே 20 லட்சத்திலும், ராமநாதபுரம் மாவட்டம் காட்டுபரமக்குடியில் ரூபாய் 1 கோடியே 1 லட்சத்திலும் கட்டப்பட்டுள்ள 4 ஆதிதிராவிடர் பள்ளி வகுப்பறை கட்டிடங்கள், அறிவியல் மற்றும் கணினி ஆய்வுக் கூடங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், பின் நாமக்கல் மாவட்டம் செங்கரையில் ரூ.1 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பழங்குடியினர் பள்ளி மாணவியர் விடுதி கட்டிடம், கள்ளக்குறிச்சி மாவட்டம் கோமுகி அணையில் ரூபாய் 2 கோடியே 92 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள பழங்குடியினர் நல உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளி கட்டிடம் என்று மொத்தம் ரூபாய் 18 கோடியே 42 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி திறந்து வைத்தார்.