வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள சேனூர் பகுதியில் நியாய விலை கடை திறப்பு விழாவில் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக காவிரி மேலாண்மை வாரியம் ஆணையத்தின் கூட்டம் வருகின்ற ஜூன் 17ஆம் தேதி நடைபெறுகிறது. அதில் மேகதாது அணை கட்டுவது குறித்து விவாதிக்க ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது என ஆணையம் அறிவித்துள்ளது.
இது தவறானது,ஏற்கனவே பல்வேறு முறை காவிரி மேலாண்மை ஆணையத்தின் விவாதிப்பதற்கு அதிகாரம் இல்லை என்று ஆணையம் கூறியிருந்தது. தற்போது தங்களுக்கு அதிகாரம் உள்ளது என்று கூறுவது கண்டிக்கத்தக்கது. இந்த நடவடிக்கையை தமிழக அரசு கடுமையாக எதிர்க்கும். மத்திய அரசின் ஆதரவு இல்லாமல் இவர்கள் இதை பேசமாட்டார்கள். இதில் கட்டாயம் ஒன்றிய அரசின் சூழ்ச்சி இருக்கிறது. இது தொடர்பாக விவாதித்தால் உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு நாடும் என்று கூறியுள்ளார்.
மேலும் ஆன்லைன் சூதாட்டம் விவகாரம் தொடர்பாக செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் துரைமுருகன்,தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படவேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்து அல்ல. அதனை கட்டாயம் தடை செய்ய வேண்டும் என்பதில் எனக்கும் உடன்பாடு உள்ளது. தமிழகத்தில் அங்கன்வாடியில் செயல்பட்ட எல்கேஜி மற்றும் யூகேஜி மூடியது குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது. தமிழகம் முழுவதும் உள்ள நதிகள்,ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகள் போன்றவற்றில் நீர் வளத் துறை மூலம் கணக்கீடு செய்து வருகிறோம். இதுகுறித்த முழுமையான கணக்கீடு வந்தால் அது நமக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.