தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அவ்வகையில் தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நேற்று முன்தினம் தொடங்கிய மழை விடிய விடிய கொட்டித் தீர்த்தது. அதனால் மாணவர்களின் நலனைக் கருதி பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி நெல்லை, தூத்துக்குடி, குமரி, ராமநாதபுரம், கடலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சென்னை மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் கன மழையும், ஒரு சில பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.