தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்து மக்களை அதிர வைத்துக் கொண்டிருக்கின்றது. தலைநகர் சென்னை கொரோனா தொற்றில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களாக தலைநகர் சென்னையை போலவே மற்ற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகின்றது. இதனால் தினம்தோறும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,500, 3000, 3,500 என்று உயர்ந்து, நேற்று 4,150 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.
பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை எப்படி உயர்கின்றது ? அதற்கு இணையாக குணமடைந்து வீடு திரும்புவார் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது மக்களுக்கு பெருத்த நம்பிக்கை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் நேற்று வரை கொரோனா தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 62,778பேர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கின்றார்கள். இந்நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த விவரம் வெளியானது அதில், தமிழகத்தில் மேலும் 3827 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 1,14,978ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று மட்டும் 1,747 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 70,017ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,793 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் இதுவரை 66,571-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக இன்று தான் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.