டாஸ்மாக் மதுக்கடைகளை வேளாண் நிலங்களில் திறக்க கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆரம்பாக்கம் கிராமத்தில் யாழினி நகரில் டாஸ்மாக் மதுபானக்கடை திறக்க தடை விதிக்ககோரி, அப்பகுதியைச் சேர்ந்த அருண் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி பரத சக்கரவர்த்தி, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, வேளாண் நிலம் என்பதால் மதுபான டாஸ்மாக் கடையை இந்த பகுதியில் திறக்கப் போவதில்லை என்றும், உரிய இடத்தில் சட்ட விதிகளின்படி அமைக்க அனுமதிக்கப்படும் என்றும் தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து டாஸ்மாக் மதுபான கடைகளை வேளாண் நிலங்களில் அமைக்க கூடாது என்றும், சட்ட விதிமுறைகளின் படி டாஸ்மாக் கடைகளை உரிய இடத்தில் தான் அமைக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.