தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததை அடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கோவையில் தனியார் நர்சிங் கல்லூரியில் பயிலும் 46 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னதாக கல்லூரியில் படிக்கும் 4 மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மற்ற மாணவர்களுக்கு கொரோணா பரிசோதனை மேற்கொண்டதில் 46 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் கோவையில் தினசரி பாதிப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இன்று முதல் ஊரடங்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை மளிகை, பால், மருந்து கடைகள் மட்டுமே இயங்கும். பிற கடைகள் இயங்க தடை. உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் பார்சலுக்கு மட்டும் அனுமதி. வணிக வளாகம், தியேட்டர், பூங்கா மற்றும் சுற்றுலா தளங்களில் இயங்க தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.