தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர் கனமழை காரணமாக கடந்த வாரங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த வாரம் ஓரளவு மழையின் அளவு குறைந்துள்ளதால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் பெய்த கனமழையால் மயிலாடுதுறை மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் என அடுத்தடுத்து அங்கு ஆய்வு மேற்கொண்டு மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினர். மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு இன்னும் திரும்பவில்லை. பள்ளிகள் நிவாரண முகாம்களாக செயல்படுவதாலும் பல பள்ளிகளில் மழை நீர் தேங்கியுள்ளதாலும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.