தமிழகத்தில் இனிமேல் யானைகளை தனிநபர்கள் கட்டுப்பாட்டில் வைக்கக்கூடாது என்று சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கோவில் யானைகள் பராமரிப்பு தொடர்பான வழக்கு சென்னை ஹைகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையின் போது தமிழகத்தில் கோவில் யானைகள்,வளர்ப்பு யானைகள், வனத்துறை யானைகளின் எண்ணிக்கை, வயது, உடல்நிலை குறித்த அறிக்கை மற்றும் யானையின் வீடியோ பதிவையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மேலும் இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவேலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கோவில்களின் கட்டுப்பாட்டில் 32 யானைகளும், தனியார் கட்டுப்பாட்டில் 31 யானைகளும், வனத்துறை கட்டுப்பாட்டில் 67 யானைகளும் உள்ளது. அந்த யானைகளை வீடியோ பதிவு செய்யும் பணிகள் நடந்து வருகிறது. அதனால் அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கேட்கப்பட்டுள்ளது.
இதனை ஏற்று வழக்கின் விசாரணையை அடுத்த மாதத்திற்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். இனிமேல் தமிழகத்தில் தனியாக யாரும் யானையைப் பிடித்து தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க கூடாது என உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளில் வளர்ப்பு யானைகள்,கோவில் யானைகள், வனத்துறை கட்டுப்பாட்டில் இருந்த யானைகள் விபரங்களையும் தாக்கல் செய்ய நீதிபதிகள் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.