தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போதைய மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால் பள்ளிகள் திறந்த சில நாட்களிலேயே பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
அதுமட்டுமன்றி தமிழகத்தில் கடந்த 2 வாரமாக கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மாணவர்களின் நலன் கருதி 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு இல்லாமல் ஆல் பாஸ் செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே மாநிலம் முழுவதும் உள்ள கல்லூரிகளுக்கும் அரசு விடுமுறை அளித்துள்ளது. இந்நிலையில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குபொதுத் தேர்தல் நெருங்கிகொண்டு இருப்பதால் அவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அவர்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்தது.
இந்நிலையில் தமிழகம் முழுவதிலுமுள்ள பிளஸ் 2 மாணவர்களுக்கு நேற்று செய்முறைத்தேர்வு தொடங்கியது. இதனையடுத்து செய்முறைத்தேர்வு அல்லாத பிரிவை சேர்ந்த பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று முதல் தேர்வுக்கு முந்தைய நாள் வரை விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செய்முறை தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு முடிந்த அடுத்த நாள் முதல் தேர்வுக்கு முந்தைய விடுமுறை விடப்படுகிறது. அனைத்து மாணவர்களும் தேர்வு கூட நுழைவுச் சீட்டு வழங்கும் நாளன்று அரசின் வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து தமிழகத்தில் அடுத்து வரும் காலங்களில் சனி மற்றும் ஞாயிறு என இரண்டு நாட்கள் இனி வழக்கம் போல் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. வாரத்துக்கு ஐந்து நாட்கள் மட்டுமே பள்ளிகள் செயல்படும். பிளஸ் 2 மாணவர்கள் செய்முறைத் தேர்வு முடிந்த பிறகு பள்ளிக்கு எக்காரணம் கொண்டும் வரக் கூடாது எனவும் தெரிவித்துள்ளது.