தமிழகத்திலுள்ள சிறைக்கைதிகளுக்கு 10 நாட்களுக்கு ஒரு முறை தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
சேலம் மத்திய சிறைக்கு சென்று நேரில் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சிறையில் கைதிகள் நிலவரம் அவர்களுக்குள்ள வசதிகள் குறித்து ஆய்வு நடந்தது. சேலம் மத்திய சிறையில், 800 கைதிகள் அடைக்கப்படும் நிலையில், தற்போது 1,351 கைதிகள் உள்ளனர். பெண்கள் சிறையில் 78 பேர் உள்ளனர்.
தமிழக சிறைகளில் உள்ள கைதிகளுக்கு, 10 நாட்களுக்கு ஒரு முறை தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குற்ற வழக்கில் சிக்கிய விசாரணை கைதிகளுக்கு பரிசோதனை செய்து தொற்று இல்லை என உறுதியான பின்பே சிறைகளில் அடைக்கப் படுகின்றனர். அதனால் அச்சமோ, அபாயமோ இல்லை. கைதிகளுக்கு மன அழுத்தத்தை போக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
மேலும் சிறை வளாகத்தில் பல்வேறு தொழிற்சாலைகள் ஏற்படுத்தப்பட்டு கைதிகளின் வருமானத்துக்கு வழி செய்யப்பட்டுள்ளது. பிரட் தயாரித்து அரசு மருத்துவமனைக்கு விநியோகிக்கப்படுகிறது. கைதிகள் மாதம் 6,000 முதல் 10,000 ரூபாய் வரை சம்பாதிக்க வசதிகள் உள்ளன. நன்னடத்தை படி 60 பேரை விடுவிக்க அரசாணை வெளியிடப்பட்டு கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நளினி உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கில் நல்ல முடிவு வரும் என எதிர்பார்க்கிறோம். ஏற்கனவே 7 பேரின் விடுதலை குறித்து கவர்னரிடம் தெரிவித்திருந்தோம். மீண்டும் கவர்னருக்கு அழுத்தம் தரப்படும் என்று அவர் கூறியுள்ளார்.