தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் தமிழகத்தில் தற்போது தினசரி 25 ஆயிரத்திற்கும் மேல் பாதிப்பு எண்ணிக்கை பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் தினசரி இரவுநேர ஊரடங்கும், வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஜனவரி 9 மற்றும் ஜனவரி 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதேபோன்று ஒமைக்ரான் மற்றும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் நலன் கருதி இன்றும்(ஜனவரி 23) ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த முழு ஊரடங்கு நாளில் ஜன 16ஆம் தேதி அன்று நடைமுறையில் இருந்த அத்தியாவசிய செயல்பாடுகள் அனுமதிக்கப்படும் என்றும், தடை செய்யப்பட்ட செயல்பாடுகள் தடையில் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வெளியூரிலிருந்து வரும் பயணிகள் நலன் கருதி அனைத்து பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் ஆட்டோக்கள், செயலி மூலமாக முன்பதிவு செய்யப்படும் வாடகை கார்கள் என அனைத்தும் இயங்கும். ஆகவே கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இவ்வாறு முழு ஊரடங்கின் போது எவை இயங்கும்? எவை இயங்காது என்பது தொடர்பான முழு விபரங்களை காணலாம்.
ஊரடங்கின் போது இயங்குபவை
# மருத்துவமனைகள், மருந்தகங்கள், பெட்ரோல் பங்குகள் இயங்கும்.
# உணவகங்கள் பார்சல் வாங்கிக்கொள்ளும் முறையில் செயல்படும்.
# அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியூர் செல்வோர் வாடகை வாகனங்களில் பயணம் மேற்கொள்ளலாம்.
# காய்கறி கடை, மீன் மற்றும் இறைச்சி கடைகள் செயல்படும்.
# திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு திருமண பத்திரிகை காண்பித்து செல்லலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊரடங்கின் போது இயங்காதவை
# பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் இயங்காது.
# மதுபான கடைகள், மொபைல் கடைகள் மற்றும் கேளிக்கை விடுதிகள் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
# அத்தியாவசியம் அற்ற கடைகள் எதுவும் இயங்காது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.