கனமழை, புயல் போன்ற இயற்கை சீற்றங்களின்போது மின்கம்பங்கள் சாய்தல், மின்தடை ஆகிய பாதிப்புகள் ஏற்படுவது வழக்கம் ஆகும். பிற நேரங்களில் மின்கம்பங்களை ஒட்டியுள்ள மரக்கிளைகள் உராய்வு போன்றவற்றினாலும் விபத்துகள் ஏற்படும். இதை தடுக்கும் வகையில் மின்வாரியம் சார்பாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அந்த அடிப்படையில் இன்று (ஜூன் 13) தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி கோட்ட துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது.
இதுகுறித்து அந்த கோட்டத்தின் செயற்பொறியாளர் சகர்பான் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வகையில் பயனாளர்களுக்கு தடையில்லா, சீரான மின்சாரம் வழங்குவதை உறுதிசெய்யவும், பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றம் செய்யவும், மின்பாதைகளுக்கு அருகேயுள்ள மரக்கிளைகள் ஆகியவற்றை அகற்றவும் மற்றும் இயற்கை இடர்பாடுகளால் சாய்ந்த கம்பங்களை நிமிர்த்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதன் காரணமாக எட்டயபுரம் துணை மின்நிலையத்தின் கரடிகுளம், கடலையூர், சென்னயம்பட்டி, லிங்கம்பட்டி, பெருமாள்பட்டி, சென்னயம்பட்டி, காட்டுராமன்பட்டி மற்றும் கழுகுமலை துணை மின்நிலைய சி.ஆர்.காலனி போன்ற பகுதிகளில் காலை 10 மணிமுதல் பிற்பகல் 1 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது. மேலும் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை பசுவந்தனை துணை மின்நிலையத்தின் தீத்தாம்பட்டி, கோவிந்தம்பட்டி, வண்டானம், புதுப்பட்டி மற்றும் விஜயாபுரி துணை மின்நிலையத்தின் வடக்கு திட்டங்குளம், தெற்கு திட்டங்குளம், தொழில்பேட்டை பகுதி, பூந்தோட்ட காலனி போன்ற பகுதிகளிலும் மின்தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.