தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் (பிப்.19) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் சில இடங்களில் வாக்குப்பதிவின் போது ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக வாக்கு பதிவில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலரிடம் விரிவான அறிக்கையை பெற்றது. அதனைத் தொடர்ந்து சென்னையில் 2 வார்டுகள் உட்பட தமிழகம் முழுவதும் 5 வார்டுகளில் 7 வாக்குச்சாவடிகளில் இன்று (பிப்.21) மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி மதுரை திருமங்கலம் நகராட்சி 17-வது வார்டில் உள்ள வாக்கு சாவடி எண் 17 W-ல் இன்று மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மறுவாக்குப்பதிவு வாக்குச்சாவடிகளில் இன்று வாக்காளர்களுடைய இடது கை நடுவிரலில் அழியாத மை வைக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலதிருமங்கலத்தில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு இன்று (பிப்.21) விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதேபோல் சென்னை பென்சன்ட் நகர் ஓடைக்குப்பம் வார்டு எண் 179 வாக்குச்சாவடி எண் 5059, வண்ணாரப்பேட்டை 51-வது வார்டில் வாக்குச்சாவடி எண் 1174-ல் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு சென்னையில் மறு வாக்குப்பதிவு நடைபெறும் இரண்டு பள்ளிகளுக்கு இன்று (பிப்.21) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.