தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பைத் தொடா்ந்து சென்னை உயா் நீதிமன்றம், உயா்நீதிமன்ற மதுரை கிளை மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் ஆன்லைன் வாயிலாக வழக்குகள் விசாரிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில், இன்று (பிப்.7) முதல் நேரடி விசாரணைக்கு அனுமதி வழங்கி பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வா்நாத் பண்டாரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக உயா்நீதிமன்ற தலைமைப் பதிவாளா் பி.தனபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை உயா் நீதிமன்றம், உயா்நீதிமன்ற மதுரை கிளை மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் நேரடியாகவும், மற்றொரு தரப்பினர் காணொலி மூலமாகவும் விசாரணை நடத்த பங்கேற்கும் சூழல் உருவானால் அதற்கும் பொறுப்பு தலைமை நீதிபதி அனுமதி வழங்கியுள்ளாா்.
இதனிடையில் நேரடி விசாரணையின்போது சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா பரவல் தடுப்பு விதிகளை தீவிரமாகப் பின்பற்ற வேண்டும். உயா்நீதிமன்றம் மற்றும் பிற நீதிமன்ற வளாகங்களில் உள்ள வழக்கறிஞா்கள் சங்கம், வழக்கறிஞா்கள் சேம்பா்கள் போன்றவை திறக்க அனுமதிக்கப்படுகிறது. ஆனால் வளாகத்தில் உள்ள நூலகம் மற்றும் உணவகத்தை மறு உத்தரவு வரும் வரை திறக்கக்கூடாது.
நேரடி விசாரணைக்கு வரும் வழக்கறிஞா்கள் மற்றும் வழக்கு தொடா்ந்தவா்கள் கொரோனா தடுப்பூசி போட்டவா்களாக இருக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளாா். இவ்வாறு நேரடி விசாரணை குறித்த உத்தரவு புதுச்சேரியில் உள்ள நீதிமன்றங்களுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.