தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1700யை தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த நான்கு மாதங்களாக தமிழகம் கொரோனா தொற்றால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசும் பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டாலும், இதன் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் 1.18 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 1,636 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதிகபட்ச உயிரிழப்பாக தலைநகர் சென்னையில் 1,117 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 136 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 105 பேரும் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த தகவலை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் இன்று மட்டும் 3,756 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,22,350 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களில் 3,051 பேர் இன்று மட்டும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 74,167ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 64 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,700 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு 46,480 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.