தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 மாநகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இதற்காக கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் பிப்…4ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. தற்போது உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வருவதால் வேட்பாளர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பரப்புரை இன்று (பிப்ரவரி 17) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுவதால், 6 மணிக்கு மேல் தேர்வு நடைபெறும் உள்ளாட்சி அமைப்புக்கு சம்பந்தம் இல்லாத வெளியூர் நபர்கள் வெளியேற மாநில தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. வெளியூரில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ள அரசியல் கட்சி பிரமுகர்கள், கட்சி தொண்டர்கள், தனி நபர்கள் என அனைவரும் அந்தந்த உள்ளாட்சி பகுதியிலிருந்து வெளியேற வேண்டும். இந்த உத்தரவை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.