தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் இன்று கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் இன்று நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், கோவை மற்றும் தேனி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும்.
மேலும் வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.