விடுபட்ட +2 மாணவர்களுக்கு ஜூலை 27 தேர்வு நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் காலத்தில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பல்வேறு மாநிலங்களில் நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து செய்யவும், ஒத்திவைக்கவும் பட்டது. தமிழகத்திலும் பத்தாம் வகுப்பு தேர்வு இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காலத்தில் நடைபெற இருந்த பன்னிரண்டாம் வகுப்பு தேர்வை 30 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதாமல் இருந்தனர்.
பின்னர் விடுபட்ட மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படும் என்று தமிழக கல்வித்துறை தெரிவித்ததை தொடர்ந்து அதற்கான தேதிகள் பல்வேறு கட்டங்களில் அறிவிக்கப்பட்டு மாற்றம் செய்யப்பட்டநிலையில்தான் வருகின்ற ஜூலை 27-ஆம் தேதி விடுபட்ட பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு நடைபெறும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் விடுபட்டு பிளஸ் டூ எழுதக்கூடிய மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில், தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இன்று முதல் ஜூலை 17ஆம் தேதி வரை ஹால்டிக்கெட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் www.dge.tn.gov.in இணையத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம். இணைய வசதி இல்லாதவர்கள் தங்கள் பள்ளியில் ஹால் டிக்கெட்டை பெறலாம் என கூறப்பட்டுள்ளது.