தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக இன்று முதல் நான்கு நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. அப்போதிலிருந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. கடந்த மாதம் உருவான இரண்டு புயல்கள் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. அதன்பிறகு வறண்ட வானிலை நிலவி வருகிறது.
இந்நிலையில் வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். குமரி கடலில் மணிக்கு 55 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் அப்பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மாலத்தீவு, குமரிக்கடல் ஆகிய பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.