தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று முதல் நான்கு நாட்களுக்கு இடி மின்னலுடன் மழை வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளை மறுநாள் 6 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். அதன்படி திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் அரபிக் கடலின் தென் கிழக்கு, கச்சத்தீவு, மன்னார் வளைகுடா, தென் தமிழ் நாட்டின் கரையோரப் பகுதியில்,வங்கக் கடல் மற்றும் குமரி கடல் பகுதிகளில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.