தமிழகத்தில் இன்று மேலும் 4,979 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது மக்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
உலக நாடுகளை உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இதன் தாக்கம் உலக அளவில் அதிகம் பாதிக்கப்பட்ட 3 நாடு என்ற வரிசைக்கு இந்தியாவை எடுத்துச் சென்றுள்ளது. குறிப்பாக மஹாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழகம் நாட்டிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட இரண்டாவது மாநிலம் என்ற வரிசையில் நீடிக்கிறது.
நாட்டிலேயே அதிக அளவு பரிசோதனை செய்த சிறந்த மாநிலம் என்ற பெருமையோடு கொரோனாவை எதிர்த்து தமிழகம் வலுவாக போராடியதன் விளைவு பிற மாநிலங்களை விட குறைந்த அளவு இறப்பு வீதம் கொண்ட மாநிலமாக தமிழகம் இருப்பது நம்பிக்கை அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனாவின் மையமாக தலைநகர் சென்னை இருந்த நிலையில், சிறப்பான சுகாதார நடவடிக்கையின் காரணமாக புத்துயிர் பெற்று மீண்டு வருகின்றது.
அதே நேரத்தில் மற்ற மாவட்டங்களில் அதன் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து செல்வது தமிழக அரசுக்கு கூடுதல் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, காஞ்சிபுரம், வேலூர், தி.மலை அதிக கொரோனா தொற்று கொண்ட மாவட்டமாக இருக்கின்றன.
இன்று தமிழகத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக 4,979 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 1,70,693 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 4,059பேர் குணமடைந்ததால் மொத்த எண்ணிக்கை 117915ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்ச பாதிப்பாக தலைநகர் சென்னையில் இன்று மட்டும் 1,254 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.