தமிழகத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது, பனை சார்ந்த பல்வேறு அறிவிப்புகளை விவசாயத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதில் நியாயவிலை கடைகளில் பனைவெல்லம் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியது. இந்நிலையில் நியாயவிலை கடைகளில் பனைவெல்லம் விற்பனையை முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். இதற்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் குமரிஅனந்தன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கற்பகம் என்ற பெயரில் பனைவெல்லத்தை நியாயவிலை கடைகளில் விற்பனை செய்யும் நடைமுறையை ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளது மிகவும் பாராட்டுக்குரியது. கற்பகம் எனப்படும் கருப்பு கட்டியில் மனித ரத்தத்தை அபிவிருத்தி செய்யும் தயமின், ரிபோபிளேவின் என்ற பி வைட்டமினும், அஸ்கார்பிக் ஆசிட் என்ற சி வைட்டமினும் அடங்கியுள்ளது. இவை மனித உடலின் வளர்ச்சிக்கு மிகவும் தேவையானது. இனிமேல் நியாயவிலை கடைகள் மூலமாக அனைத்து மக்களையும் சென்றடையும்.
இதனைப் போலவே வேம்பு,கற்றாழை மற்றும் மூலிகைகளாலான சோப்பு தயாரிப்பது மக்கள் நலன் கருதி செய்யப்படும் நற்காரியங்கள். காஞ்சி பட்டு பாவாடை மற்றும் சாட்டை ஆகியவை விற்பனை செய்வதற்கு வினியோகிக்கப்பட்டு நெசவாளர்களுக்கு ஊக்கமளிப்பது பாராட்டுகிறேன். இத்தகைய முயற்சிகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் தமிழர்களின் அடையாளம் காக்கப்பட்டு நிச்சயம் உயர் நிலைக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும். இதற்காக தமிழக முதல்வரை நான் வாழ்த்துகிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.