இரவு நேரங்களில் இயக்கப்படும் அரசு விரைவுப் பேருந்துகள் நாளை முதல் பகலில் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிக்கை ஒன்றை கொரோனா வெளியிட்டுள்ளது. தொற்று பரவுவதை தடுத்திட மத்திய அரசு வழிக்காட்டுதலின்படி, தமிழ்நாடு அரசின் சார்பில் ஊரடங்கு உத்தரவு, கட்டுப்பாடுகளுடன் தளர்வுகளும் அமுலில் இருந்து வருகிறது.
கொரோனா நோய் பரவல் நிலை தற்பொழுது அதிகரித்து வருகின்ற நிலையில், அதனை கட்டுப்படுத்துகின்ற வகையில், நாளை (20.04.2021) முதல் இரவு நேர ஊரடங்கினை அமுல்படுத்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவில், இரவு நேரங்களில் வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் போக்குவரத்துச் சேவையும் இயங்கிட அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநகர் போக்குவரத்துக் கழகத்தைப் பொறுத்தமட்டில், பயணிகள் நின்று கொண்டு பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதால், முக்கிய வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், அரசு விதித்துள்ள இரவு ஊரடங்கினை பின்பற்றி அதிகாலை 4.00 மணி தொடங்கி இரவு 10.00 மணி வரையிலும், பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.