ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதை தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் முக்கியச் சாலையாக விளங்குகிறது. இந்த மலைப்பாதை வழியாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே 24 மணி நேரமும் சரக்கு மற்றும் வாகன போக்குவரத்து நடைபெறுவது வழக்கம். இந்த முக்கிய வழித்தடமான திம்பம் மலைப்பாதையில், வாகனங்கள் மோதி வனவிலங்குகள் பலியாவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.
அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை வாகன போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை பிப்ரவரி 10 ( நேற்று ) முதல் அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதையடுத்து திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை என்ற கட்டுப்பாடு அமலுக்கு வந்தது. அதன்படி இரவு 9 மணி வரை 2 மற்றும் 6 சக்கர வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. அதேபோல் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை எந்த வாகனங்களுக்கும் அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.