திருப்பத்தூரில் வக்ஃபு நிறுவனப் பணியாளா்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கப்படும் என ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட பின்,வக்ஃபு நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு புதிய இருசக்கர வாகனங்களை வாங்குவதற்கான மானியம் வழங்கும் திட்டமானது செயல்பட்டு வருகிறது. எனவே இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபருக்கு, இருசக்கர வாகனத்தின் மொத்த விலையில் இருந்து 50% தொகை மானியமாக வழங்கப்படும்.
அந்தவகையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வஃக்பு நிறுவன பணியாளர்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனமானது வழங்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் அமா் குஷ்வாஹா தெரிவித்துள்ளார். மேலும் இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழ்கண்ட தகுதிகளை பெற்றிருக்க வேண்டும். அதன்படி தமிழ்நாட்டில் உள்ள வக்ஃபு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட வக்ஃபு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், விண்ணப்பிக்கும் நாளிலிருந்து குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும்.
மேலும் வயது வரம்பு 18 முதல் 40 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். இதையடுத்து கல்வி தகுதி எதுவும் தேவையில்லை, இருப்பினும் இருசக்கர வாகனம் ஓட்ட கற்றுணா்வுக்கான சான்றிதழை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். இதனைத் தொடர்ந்து விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் முறையானது, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வக்ஃபு நிறுவனங்களில் பணிபுரியும் நிதியுதவி கோரும் பணியாளர்கள் இந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தேவைப்படும் ஆவணங்களுடன் வருகின்ற ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பதிவு செய்யப்பட்ட வக்ஃபு நிறுவனத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் மானிய உதவி கோரி விண்ணப்பித்தால், 1. பேஷ் இமாம், 2. அரபி ஆசிரியா்கள், 3. மோதினார், 4. முஜாவா் என்ற முன்னுரிமை அடிப்படையில் ஒருவருக்கு மட்டுமே மானியத் தொகை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.