Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இலவச பூஸ்டர் தடுப்பூசி திட்டம்…. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பேச்சு…..!!!!

தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுதும் சென்ற சில வாரங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரையிலும் நீண்டநாட்களுக்கு பின் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கையானது 2,500-ஐ தாண்டி இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் தினசரி பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து, முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் சென்னை எழும்பூரில்18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச பூஸ்டர் தடுப்பூசி திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவங்கி வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தனியார் மருத்துவமனைகளில் பணம் கொடுத்து பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை என்பதால் அதனை இலவசமாக செலுத்த ஒன்றிய அரசு அனுமதி வழங்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழகத்தில் வீடுகளை தேடி சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டது. அத்துடன் பூஸ்டர் தடுப்பூசிக்கான கால அவகாசம் 6 மாதங்களாக குறைக்கப்பட்டு உள்ளது. மாநிலம் முழுதும் 31 மெகா தடுப்பூசி முகாம்கள் இதுவரையிலும் நடத்தப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் முதல் டோஸ் 95 சதவீதம் பேரும் 2-வது டோஸ் 87 சதவீதம் பேரும் செலுத்திக்கொண்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் 2,590 இடங்களில் அரசு கோவிட்தடுப்பு மையங்களில் முதல் டோஸ், 2-வது டோஸ் மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். அதுமட்டுமின்றி மெகா தடுப்பூசி முகாம் 15 தினங்களுக்கு ஒருமுறை நடைபெறும் என கூறியுள்ளார். அதனை தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினின் உடல்நிலை இப்போது நன்றாக இருக்கிறது. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று (அல்லது) நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்” என தெரிவித்தார்.

Categories

Tech |