தமிழகத்தில் பட்டியலினத்தவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆகியோருக்கு அரசு பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் குறிப்பிட்ட சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகைகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.
இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் நடைபெற்ற மானியக் கோரிக்கையின் போது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆகியோருடைய சட்டபூர்வமான உரிமைகளை பாதுகாக்கவும் அவர்களுடைய முக்கியமான பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் தமிழகத்தில் ஆதிதிராவிடர்- பழங்குடியினர் நல வாரியம் என்ற புதிய அமைப்பு உருவாக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். இதையடுத்து 100 பழங்குடியின நபர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு இரண்டு மாத கால பயிற்சியோடு ஆறு மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும் என்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது பழங்குடியின மக்கள் பாரம்பரிய பழங்குடியின நடைமுறைகளை பின்பற்றி தொழில் தொடங்க களிம்பு, மாத்திரை செய்யும் பொடிகள், கசாயம், லேகியம், மருத்துவ எண்ணெய், நெய் மற்றும் தேன் கலந்த மருந்துகள் இவற்றை பாரம்பரிய முறையில் மருந்துகளை தயாரிக்க பழங்குடியின பாரம்பரிய சமூக சுகாதார திறன் பயிற்சி மூலம் சான்று பெற்றவர்களுக்கு சுய தொழில் துவங்குவதற்கு ஒரு நபருக்கு 50 ஆயிரம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. தற்போது ஒரு நபருக்கு 50 ஆயிரம் என 100 நபர்களுக்கு 50 லட்சத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.