அரசுப் பள்ளிகளில் படித்து உயர் கல்வியில் சேரும் மாணவிகள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “கல்வி உதவித்தொகை தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையினை அதிகரிக்கும் விதமாக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் வாயிலாக செயல்படுத்தப்படும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 6- 12-ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி சேரும் அனைத்து மாணவிகளுக்கும், சான்றிதழ் படிப்பு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, தொழிற்கல்வி போன்றவற்றில் இடைநிற்றல் இன்றி கல்வி படித்து முடிக்கும் வரை மாதம் ரூபாய் 1000 அவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும்.
இந்த மாணவிகள் முன்பே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும் கூட இந்த திட்டத்தில் கூடுதலாக உதவிபெறலாம். மாணவிகள் 6 -12 ஆம் வகுப்பு வரை தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் பயின்று தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில்பவராக இருத்தல் வேண்டும். தனியார் பள்ளியில் 6 -8 ஆம் வகுப்பு வரை படித்த பிறகு 9-12-ம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் படித்த மாணவிகளும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். 2022-2023 ஆம் கல்வியாண்டில் மாணவிகள் புதயதாக மேற்படிப்பில் முதலாம் ஆண்டு சேர்ந்த பின் இணையதளம் வழியே இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். அத்துடன் இதர முதலாம் ஆண்டில் இருந்து 2 ஆம் ஆண்டு போகும் மாணவிகளும், 2ஆம் ஆண்டிலிருந்து 3 ஆம் ஆண்டு செல்லும் இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவிகளும், தொழிற்கல்வியைப் பொருத்தமட்டில் 3 ஆம் ஆண்டிலிருந்து 4 ஆம் ஆண்டிற்கு போகும் மாணவிகளும், மருத்துவக் கல்வியைப் பொருத்தமட்டில் 4 ஆம் ஆண்டில் இருந்து 5 ஆம் ஆண்டு செல்லும் மாணவிகளும் இந்த திட்டத்தின் கீழ் பயனடையலாம்.
இந்த திட்டத்தின் கீழ் இளநிலைப் படிப்பு பயிலக்கூடிய மாணவிகள் மட்டுமே பயனடைய முடியும். ஆனால் முதுநிலை படிப்பு படிக்கும் மாணவிகள் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற முடியாது. இத்திட்டத்தில் பயன் பெறுவது தொடர்பாக தங்களுக்கு தேவையான தெளிவுரைகள், கூடுதல் விபரங்களை கட்டணம் இல்லா தொலைபேசி எண் 14417 என்பதில் தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம். இளநிலை கல்விபெறும் அனைத்து மாணவிகளும் இந்த திட்டத்திற்கான புதியதாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் https://penkalvi.tn.gov.in என்பதன் வழியே தங்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.