Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்க தடை….. எச்சரிக்கை விடுத்த அரசு…..!!!!!

ஊரக உள்ளாட்சிகளில் உயர் கோபுரம் மின்விளக்குகளை மறு உத்தரவு வரும் வரையிலும் அமைக்கக்கூடாது என தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்காக எந்த விதமான நிதியையும் பயன்படுத்தக்கூடாது. இதை மீறினால் சம்பந்தப்பட்ட அலுவலரிடம் இருந்து அதற்கான தொகை பிடித்தம் செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் பிரவீன் நாயர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது, மாவட்ட ஊராட்சி, வட்டார ஊராட்சி, கிராம ஊராட்சி போன்ற மூன்றடுக்கு ஊராட்சி அமைப்புகளில், எந்த நிதியில் இருந்தும் உயர்கோபுர மின் விளக்குகள், சிறு மின்கோபுர விளக்குகள், ஒன்றுக்கு மேற்பட்ட விளக்குகள் கொண்ட கம்பங்களுடன் கூடிய தெரு விளக்குகள் அமைப்பது தடை செய்யப்படுகிறது. சோலார் உயர்கோபுர மின் விளக்குகள் அமைப்பதும் மறு உத்தரவு வரும் வரையிலும் தடை விதிக்கப்படுகிறது.

இதனிடையில் சோலார் எல்.இ.டி., விளக்குகள் கம்பங்களுடன் கொள்முதல் செய்வதும் தடை செய்யப்படுகிறது. எனவே இந்த உத்தரவையும் மீறி கொள்முதல் செய்யும் அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதாவது மீறி கொள்முதல் செய்யப்படும் அல்லது நிறுவப்படும் விளக்குகளுக்கு செலவிடப்படும் தொகை, சம்பந்தப்பட்ட அலுவலரிடம் இருந்து பிடித்தம் செய்யப்படும். இந்த உத்தரவின் நகலை மாவட்டத்திலுள்ள எல்லா அலுவலர்கள், கிராம ஊராட்சி தலைவர்கள், ஊராட்சி செயலர்கள் ஆகியோருக்கு வழங்கி அவற்றின் நகல்களை கலெக்டர்கள் வைத்திருக்க வேண்டும். இந்த உத்தரவு அனைத்து நிலை அலுவலர்களுக்கும், ஊராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கும் சென்று சேர்வதற்கு மாவட்ட கலெக்டரே பொறுப்பு அலுவலர் ஆவார். இவ்வாறு உத்தரவின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை 15 நாட்களுக்குள் ஊரக வளர்ச்சித் துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இ.பி.எஸ். புகார் காரணமாக எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி, கடந்த இரு மாதங்களுக்கு முன்பு தி.மு.க.,வினர் அதிகாரிகளை மிரட்டுவதாக குற்றம்சாட்டி இருந்தார். இந்நிலையில் குத்தாலம் வட்டார வளர்ச்சி அலுவலர், கலெக்டருக்கு எழுதியுள்ள கடிதத்தில், உயர்கோபுர மின்விளக்கு அமைக்க ஒன்றிய பொது நிதியில் இருந்து எடுக்கக்கூடாது என்ற விதி இருந்தாலும், அதை மீறி டெண்டர் விடும்படி ஒன்றிய சேர்மன் மிரட்டுவதாக புகார் தெரிவித்துள்ளார். தன்னுடைய உயிருக்கு ஆபத்து எனவும் தெரிவித்துள்ளார். மேலும் திமுக-வினர் அராஜகம் அத்துமீறிவிட்டது என குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் எந்தவொரு நிதியிலிருந்தும், மூன்றடுக்கு ஊராட்சிகளில் உயர்கோபுர மின்விளக்கு கொள்முதல் செய்தல் மற்றும் அமைப்பதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |