தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் பல்வேறு இடங்களில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இது நோய் தொற்றாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், இந்த நோய் கண்டறியப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகம் ஸ்டெராய்டு வழங்கப்படுவதால் கருப்பு பூஞ்சை நோய் வருகிறது.
இந்நிலையில் கொரோனா உயிரிழப்புகள் அனைத்தும் மறைக்கப்பட்டு வருவதாக பல புகார்கள் எழுந்ததை அடுத்து, கொரோனா உயிரிழப்பு மறைக்கப்படவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் இதுவரை 1,736 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 77 பேர் உயிரிழந்துள்ளனர். கருப்பு பூஞ்சை சிகிச்சைக்காக மத்திய அரசிடம் 45 ஆயிரம் மருந்து குப்பிகளை கேட்டுள்ளோம் என அவர் கூறியுள்ளார்.