தமிழகத்தில் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இன்று முதல்வர் முக ஸ்டாலின் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனைத்தொடர்ந்து தளர்வுகளுடனான ஊரடங்கு வரும் 2022 ஜனவரி 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார். இதில் பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அனுமதி:
வழிபாட்டுத் தலங்களைப் பொறுத்தவரை தற்போது நடைமுறையிலுள்ள வழிகாட்டு நெறிமுறைகளே தொடர்ந்து கடைபிடிக்கப்படும்.
மெட்ரோ ரயில்களில் 50% பயணிகள் மட்டுமே அனுமதி. அழகு நிலையங்கள், சலூன்களில் ஒரே நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி.
உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் யோகா பயிற்சி நிலையங்கள் 50% வாடிக்கையாளர்களுடன் மட்டுமே அனுமதிக்கப்படும்.
திரையரங்கங்கள் உள்ளிட்ட அனைத்து அரங்கங்களிலும் இருக்கைகளில் அதிகபட்சம் 50% பார்வையாளர்களுடன் மட்டும் செயல்பட அனுமதி.
துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகளில் 50% வாடிக்கையாளர்களுக்கு மிகாமல் செயல்படுவதை உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.
பொது போக்குவரத்து பேருந்துகளில் உள்ள இருக்கைகளுக்கு மிகாமல் பயணிக்க அனுமதிக்கப்படும்.
9 – 12ம் வகுப்பு வரை பள்ளிகள், கல்லூரிகள் தொடர்ந்து செயல்படும். திருமணம் மற்றும் அது சார்ந்த நிகழ்வுகள் 100 பேருக்கு மிகாமலும், இறப்பு சார்ந்த நிகழ்வுகள் 50 பேருக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
உணவகங்கள், விடுதிகள், தங்கும் விடுதிகளில் 50% வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து சாப்பிட அனுமதி.
தடை:
மழலையர், விளையாட்டு பள்ளிகள், நர்சரி பள்ளிகள் (LKG, UKG) செயல்பட அனுமதி இல்லை.
அனைத்து பள்ளிகளிலும் 1 – 8ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு ஜனவரி 10ம் தேதி வரை அனுமதி இல்லை.
அனைத்து பொருட்காட்சி மற்றும் புத்தகக் காட்சிகள் தற்போதைக்கு ஒத்திவைப்பு.
சமுதாய கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்போது நடைமுறையில் உள்ள தடை தொடரும்.