காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், “அந்தமான் மற்றும் அதனை ஒட்டி இருக்கின்ற கிழக்கு வங்க கடற்பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து ஆந்திர மாநிலம் நோக்கி நகரும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தில் கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நீலகிரி, வேலூர், திருப்பத்தூர் மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யும்.வங்கக்கடலில் அந்தமான் பகுதியில் வருகின்ற பதினான்காம் தேதி புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதற்கு வாய்ப்பு இருக்கிறது”என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.