தஞ்சை அம்மாபேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 56 மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன.
தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு மே 3ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி முடிவடையும் என பள்ளி கல்வித்துறை அறிவித்தது.
இந்நிலையில் தஞ்சை அம்மாபேட்டை அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 56 மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 20 பேருக்கு உறுதியான நிலையில்,இன்று மேலும் 36 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு பணியாற்றும் ஆசிரியர் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் பள்ளி மூடப்பட்டு, சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. மேலும் ஆசிரியர் மற்றும் மாணவிகளுடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது. இது சக ஆசிரியர்கள், மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.