தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் பலமுறை அறிவுறுத்தியும் ஒரு வளாகத்தில் ஒரு பெயரின் கீழ் பல இணைப்புகள் பெறும் விதிமீறல் தொடா்ந்து கொண்டே உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆகவே ஒரு வளாகத்தில் ஒரே பெயரின் கீழூள்ள தாழ்வழுத்த மின் இணைப்புகள் தொடர்பான தொடா் ஆய்வுகளை நடத்துமாறு, பகிா்மானப் பிரிவு தலைமைப் பொறியாளா்களுக்கு கண்டிப்புடன் கூடிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது. இந்த விதிமீறலை ஆதாா் எண் இணைப்பு வாயிலாக களைய மின்வாரியம் திட்டமிட்டு உள்ளது.
இது குறித்து மின்வாரிய வட்டாரத்தினா் கூறியதாவது, தமிழகத்தில் இலவசம் மற்றும் மானிய விலை மின்சாரத்துக்கு வருடத்துக்கு ரூபாய் 3,500 கோடிக்கும் அதிகமாக செலவாகிறது. ஆனால் ஒரே வளாகத்தில் தனித்தனியாக பல்வேறு மின் இணைப்பு பெற்று, ஒவ்வொரு மின் இணைப்புக்கும் 100 யூனிட் இலவச மின்சாரத்தை பலா் பெற்று வருகின்றனா். இதன் மூலமாக வாரியத்துக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. ஒரே வளாகத்தில் ஒரு பெயரின் கீழ் பல்வேறு தாழ்வழுத்த இணைப்புகள் பெறுவது மின்சார ஒழுங்குமுறை ஆணைய விதிகளுக்கு எதிரானது. இவ்வாறு இணைப்பு வழங்கப்பட்டு இருந்தாலும் அதை ஒருங்கிணைத்து உயரழுத்த மின் இணைப்பாக மாற்ற வேண்டும்.
ஆனால் அதனை செய்யாதவா்களைக் கண்டறிவதில் பெரிய சிக்கல் நீடித்து வந்தது. ஆகவே ஒரு வளாகத்தில் ஒரே பெயரின் கீழ் பெறப்பட்ட தாழ்வழுத்த மின் இணைப்புகளைக் கண்டறிய மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்குப் பின் இந்தத் திட்டம் அமலாகும் என்று கூறப்பட்டது. இதன் வாயிலாக முறைகேட்டில் ஒரு பெயரின் கீழ் பெறப்பட்ட ஒரு இணைப்பைத் தவிர மற்ற இணைப்புகளுக்கு மானியம் ரத்து செய்யப்படும். இதனால் வாரியத்தின் வருவாய் இழப்பு தடுக்கப்படும் என்று கூறினர்.