தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஜனவரி 31ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சில கூடுதல் கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், கொரோனா பாதிப்பு குறைந்தால் இனி வரும் வாரங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட மாட்டாது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ள சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் கோவை உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் மட்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்க அரசு திட்டமிட்டு வருகிறது. இதுகுறித்து முதல்வர் வரும் வாரத்தில் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். அதனால் தமிழகத்தில் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.