தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரமாக மழை குறைந்த நிலையில் மீண்டும் கனமழை தொடங்கியுள்ளது. இதனால் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
அதில் விழுப்புரத்தில் கடந்த 2 வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தளவானூரில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தடுப்பணை உடைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் கரையோரம் உள்ள நிலங்களில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்றில் மேலும் நீர் வரத்து அதிகரித்தால் அருகில் உள்ள அரசு பள்ளிக்கு பாதிப்பு ஏற்படும். இதனை தடுப்பதற்காக 300மீ தொலைவுக்கு தடுப்பணை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை விழுப்புரம் மாவட்டம் ஆட்சியர் மோகன் நேரில் சென்று பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.