தமிழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு எப்போது கல்லூரி திறக்கப்படும் என்று 2 நாட்களில் முடிவு எடுக்கப்படும் என தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. பள்ளியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால் பள்ளிகள் திறப்பது பற்றி மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது 90% பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பதற்கு சம்மதம் தெரிவித்தனர். இதனையடுத்து கடந்த ஜனவரி 19ஆம் தேதி பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டன.
கடந்த மாதம் இரண்டாம் தேதி கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் முதலாமாண்டு மாணவர்களுக்கு எப்போது கல்லூரி திறப்பது என்பது பற்றியும், ஒரு வகுப்பறையில் 30 மாணவர்கள் வீதம் காலை மாலை என இரு வேளைகள் பாடம் நடத்துவது பற்றியும் இரண்டு நாட்களில் முடிவு எடுக்கப்படும் என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தகவல் தெரிவித்துள்ளார்.