சென்னை ஐஐடியில் மாணவர்கள் உட்பட மேலும் 79 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்திற்கு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பள்ளிகள் திறப்பது பற்றி தமிழக அரசு எந்த ஒரு முடிவையும் வெளியிடவில்லை. அதன் பிறகு கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் சென்னை ஐஐடியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பரவியது. அதனால் அண்ணா பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களுக்கு இன்று மருத்துவ குழுவினர் கொரோனா பரிசோதனை செய்கின்றனர்.ஏற்கனவே 104 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், தற்போது மேலும் 79 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 183 ஆக அதிகரித்துள்ளது. அக்கல்லூரி உரிய விதிமுறைகளை பின்பற்றாததால் ஏற்பட்ட விளைவுதான் இது. மேலும் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருவதால் ஐஐடி ஹாட்ஸ்பாட்டாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.