தமிழகத்தில் பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு கடந்த சில மாதங்களாகவே நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. கடந்த கல்வி ஆண்டில் காலம்தாழ்த்தி கல்லூரிகள் திறக்கப்பட்டதால் மாணவர்களுக்கு மேமாதத்தில் தான் செமஸ்டர் தேர்வானது நடத்தப்பட்டது. அந்த வகையில் மே மாதத்தில் துவங்கி ஜூன்மாதம் முழுவதும் கலை, மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வானது நடைபெற்றது. இதையடுத்து தேர்வு முடிந்த பின் கிட்டத்தட்ட 2 வாரங்கள் வரைக்கும் மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்கிடையே 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு முடிவுகள் சென்ற ஜூன் 20ஆம் தேதி வெளியாகி மாணவர் சேர்க்கை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்திலுள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் கோடை விடுமுறைக்கு பிறகு 2022-2023 கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் வரும் ஜூலை 18 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
இதன்படி தமிழகத்திலுள்ள அனைத்து கல்லூரிகளையும் திறப்பதற்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்யுமாறு கல்லூரியின் முதல்வர்களுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் கல்லூரிகளில் முன்கூட்டியே கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்படி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனிடையில் தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவிவருவதால் கட்டாயமாக மாணவர்கள் முகக்கவசம் அணிந்துதான் வகுப்புகளுக்கு செல்ல வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.