தமிழகம் முழுவதும் ஊராட்சிகளிலுள்ள குடிசை வீடுகள் தொடர்பான விபரங்களை பெற புதிதாக கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் பிரவீன் பி நாயர் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில், “தமிழகத்தில் 2010ஆம் ஆண்டு கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் குடிசை வீடுகள் தொடர்பாக கணக்கெடுக்கப்பட்டது. இந்நிலையில் 22.04 லட்சம் குடிசை வீடுகள் இருப்பதை கண்டறிந்தனர். அவற்றில் 3.05 லட்சம் நபர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டது.
இதையடுத்து 2016-17 முதல் பிரதமர் வீடு கட்டும் திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களின் கீழ் வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது குடிசைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்க இன்னும் எவ்வளவு குடிசை வீடுகள் இருக்கின்றன என்பதை கண்டறிய வேண்டும். ஆகவே ஊராட்சிகள் முழுவதும் குடிசை வீடுகள் எண்ணிக்கை தொடர்பாக மறு கணக்கெடுப்பு நடத்துவதற்கு உரிய படிவங்களை நாளைக்குள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அதேபோன்று கணக்கெடுப்பு குழுக்களை அமைக்க வேண்டும். அவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு, பயிற்சியாளர் குழுக்களையும் உருவாக்க வேண்டும்.
அதன்பின் நாளை மறுநாள் பயிற்சியாளர்களுக்கும், 22ஆம் தேதி கணக்கெடுப்பாளர்களுக்கும் பயிற்சி அளிக்க வேண்டும். கணக்கெடுப்பு பணியை 24ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 3க்குள் முடிக்க வேண்டும்” என்று கடிதத்தில் தெரிவித்துள்ளார். கணக்கெடுப்பு படிவத்தில் குடும்ப தலைவர் பெயர், மதம், ஜாதி, வாக்காளர் அடையாள அட்டை எண், ரேஷன் கார்டு எண், குடும்ப ஆண்டு வருமானம், சொந்த வீடா, வாடகை வீடா ஆகிய விபரங்கள் கேட்கப்பட இருக்கின்றன. மேலும் இதற்கு முன்பு வீடு வழங்கும் திட்டத்தில் பயனடைந்தவரா, வீட்டு முகவரி, வீட்டு வரி விதிப்பு, மின் இணைப்பு விபரம், வீட்டின் சுவர் மற்றும் மேற்கூரை தொடர்பான விபரம், பட்டா, மனையின் வகை குறித்த விபரங்களும் இடம் பெறும். அதனை கணக்கெடுப்பாளர், குடிசை வீட்டில் வசிப்போரிடம் கேட்டு பூர்த்தி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.