நாடு முழுவதும் உள்ள கிராமங்களில் வீடுதோறும் குடிநீர் இணைப்பை வழங்க “ஜல்ஜீவன்” திட்டத்தை மத்திய அரசின் ஜல்சக்தி அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் 12 ஆயிரத்து 525 கிராமங்களிலுள்ள 1 கோடி வீடுகளுக்கு 2024 மார்ச் மாதத்திற்குள் குடிநீர் இணைப்பை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக 4,600 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த பணிகள் 2019ஆம் ஆண்டு முதல் பல்வேறு மாவட்டங்களில் நடந்து வருகின்றன. இதனிடையில் வீடுதோறும் தினசரி 55 லிட்டர் குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணிகள் ஊரக வளர்ச்சி துறை மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முந்தைய அதிமுக ஆட்சியில் பணிகள் முறையாக நடைபெறவில்லை. அதுமட்டுமின்றி பணிகள் முடிந்த மாவட்டங்களில் வீடுகளுக்கு குடிநீர் விநியோகத்தை இதுவரையிலும் தொடங்கவில்லை.
இதுவரையிலும் திட்ட இலக்கில் 50 சதவீதத்தை மட்டுமே எட்ட முடிந்துள்ளது. திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நீல நிற பிளாஸ்டிக் பைப்புகள், தங்க நிற திருகும் குழாய்கள் பயன்படுத்தப்பட்டு வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. ஒரு வருடம் கூட முடியாத நிலையில் தரமற்ற பிளாஸ்டிக் மற்றும் திருகும் பிளாஸ்டிக் சேதமடைந்தது. இந்த பொருட்கள் ஒப்பந்ததாரர்கள் மூலமாக மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில் பிரத்யேகமாக பயன்படுத்தப்பட்டதால் அதே அளவுக்கான பைப், திருகு குழாய்கள் கடைகளில் கிடைப்பதில்லை. இதன் காரணமாக சேதமடைந்த குழாய்களை சரிசெய்ய முடியாமல் ஊராட்சி நிர்வாகங்கள் திணறி வருகின்றன. தமிழகத்தில் இத்திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் அரங்கேறி வருவதை அறிந்த மத்திய ஜல்சக்தி அமைச்சகம், தமிழ்நாட்டில் பணிகளை விரைவுப்படுத்த உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் குழாய் பொருத்தப்பட்ட வீடுகளுக்கு பிப்ரவரி இறுதிக்குள் குடிநீர் இணைப்பை வழங்கவும் அறிவுறுத்தியுள்ளது.