தென்னாப்பிரிக்காவில் இருந்து குரங்கு அம்மை வைரஸ் தற்போது ஐரோப்பியா, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த தொற்று பாதிக்கப்பட்டால் 6 முதல் 13 நாட்கள் வரை அதன் தாக்கம் இருக்கும். மேலும் பாதிப்பு தீவிரமடைந்தால் 5 முதல் 21 நாட்கள் வரை கூட தாக்கம் இருக்கும். காய்ச்சல், தலைவலி, முதுகு வலி, நிண நீர், முனைகளில் வீக்கம், குளிர்ச்சி, சோர்வு, தொண்டை புண் மற்றும் இருமல் போன்ற அறிகுறிகள் தென்படும். மற்ற நாடுகளை தொடர்ந்து இந்தியாவில் குரங்கு அம்மை வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. தற்போது கேரளாவில் 2 பேருக்கு குரங்கு அம்மை வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து டெல்லி, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து தொடர்ச்சி உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பிள் இருந்தவர்களை கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பன்னாட்டு விமான நிலையங்களில் கண்காணிப்பு மேலும் குரங்கு அம்மை உள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகளை பரிசோதனை செய்ய வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. மற்ற மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்தில் குரங்கு அம்மை தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அறிகுறி உள்ளவர்களிடமிருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இதில் கன்னியாகுமரி, திருச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த இரண்டு குழந்தைகளுக்கு அறிகுறிகள் தென்பட்டதையடுத்து பரிசோதித்ததில் அவர்களுக்கு குரங்கு அம்மை இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.