தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிவேகமாக பரவி வந்தது. இதையடுத்து தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டன. அதன்படி இரவு நேர ஊரடங்கு, வாரக் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இதையடுத்து கொரோனா தாக்கம் சற்று குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அந்த வகையில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு போன்றவை ரத்து செய்யப்பட்டது. மேலும் பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்பட்டு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது, தமிழகத்தில் கொரோனா எண்ணிக்கை குறைந்துள்ளது. அதே சமயம் தேனி, கிருஷ்ணகிரி, கோவை உள்ளிட்ட எல்லையோர மாவட்டங்களில் கொரோனா தொற்று சற்று அதிகமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். இதனிடையில் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பது போன்ற நோய் கட்டுப்பாடுகளை முழுமையாக கடைப்பிடிப்பதில்லை. கொரோனா தொற்று படுக்கைகளில் 4% நோயாளிகள் மட்டுமே இருக்கின்றனர். மே மாதம் இருந்த பதற்றம் தற்போது இல்லை என்று கூறினார்.