தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள்.
ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஏப்ரல் 10 முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் கண்காணிப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று மாலை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். இந்த சந்திப்பின் போது தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்த நிலையில் இது குறித்து இருவரும் ஆலோசிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் எடுக்கப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமை நீதிபதியிடம் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எடுத்துரைப்பார் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.