தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கான தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், தமிழகத்தில் 12 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பி. ஏ.4 வகை கொரோனா தொற்று 4 பேருக்கும், பிஏ 5 வகை கொரோனா தொற்று 8 பேருக்கும் ஏற்பட்டுள்ளது. உருமாறிய ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 12 பேரும் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். இதற்கு முன்னதாக இந்தியாவில் ஜூன் மாதம் கொரோனா நான்காவது அலை தொடங்க வாய்ப்பு உள்ளதாக கான்பூர் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கூறி இருந்தனர்.
அவர்கள் கூறியது போல கொரோனா இரண்டாவது அலை, 3 வது அலையின் போது கணித்தது கிட்டத்தட்ட சரியாக இருந்தது. தற்போது அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு நான்காவது அலையின் அறிகுறியாக இருக்கலாம் என்று அமைச்சர் கூறியுள்ளார். மேலும் மக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். அவர் கூறியுள்ள இந்த தகவல் மக்கள் மத்தியில் சற்று அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.