தமிழக மக்கள் கோடை வெப்பத்திலிருந்து பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் வெப்பத் தணிப்பு திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழகத்தில் கோடை வெப்பம் சென்ற காலங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்து வருவதை உணரமுடிகிறது. வருடந்தோறும் கோடை வெப்பம் அதிகரிக்கும் போதெல்லாம், அதனை சபித்துக்கொண்டு மட்டும் கடந்து செல்வதால் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை.
ஆகவே சரியான திட்டங்களை வகுத்து செயல்படுத்துவதால் மட்டும்தான் வெப்பத்தில் இருந்து தப்பிக்க முடியும். புவி வெப்பமடைதல் காரணமாக பூமியின் சராசரி வெப்பநிலையானது 1.2 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. ஆனால் இது மேலும் அதிகரித்து 1.5 டிகிரி செல்சியஸ் அளவை விரைவில் எட்டும். இதனால் ஏற்படக்கூடிய அதிதீவிர வெப்ப அலை உள்ளிட்ட இயற்கை பேரிடர்களால் தமிழகம் பாதிக்கப்படும் ஆபத்து இருக்கிறது. இதனை உணர்ந்து பாதிப்புகளை எதிர்கொள்ளவும், கட்டுப்படுத்தவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிலும் குறிப்பாக சென்னை, வேலூர், சேலம், திருச்சி, மதுரை உள்ளிட்ட மாநகரங்கள் அதிவெப்ப மாவட்டங்களுக்கான வெப்பத்தணிப்பு செயல் திட்டத்தை உடனே உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.